ஆசனூர் அருகே மின்தடையால் இருளில் மூழ்கிய 50 மலைக்கிராமங்கள்
ஆசனூர் அருகே மின் தடை காரணமாக 50 மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
தாளவாடி
ஆசனூர் அருகே மின் தடை காரணமாக 50 மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
50 மலைக்கிராமங்கள்
தாளவாடி அருகே உள்ள மலைக்கிராமம் ஆசனூர். ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரேபாளையம், குளியாடா, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவள்ளம் உள்பட 50 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மின்கம்பம் அமைத்து அதன் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மின்தடை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் இந்த மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் அன்று இரவு 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்சாரம் இல்லாததால் இரவு நேரத்தில் மின்விசிறிகள் ஓடவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதிக்கு வரும் மின் கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதால் இதுபோன்ற மின்தடைகள் ஏற்படுகின்றன. வாரத்தில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் என கடந்த ஒரு ஆண்டாக இந்த மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்தடை காரணமாக எங்களுக்கு சரியாக குடிநீரும் கிடைப்பதில்லை. மேலும் இருளில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே எங்களுக்கு மின்சாரம் சீராக வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.