ஆசனூர் அருகே20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்;3 பெண்கள் உயிர் தப்பினர்
ஆசனூர் அருகே 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிர் தப்பினர்.
கோவையை சேர்ந்தவர் தேவராஜ். இவர் தன்னுடைய உறவினர்களான கோவையை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 48) மணிமேகலை (64), சாந்தி (50) ஆகியோருடன் காரில் நேற்று காலை கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம் ஆசனூரில் காரை தேவராஜ் நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து இறங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது அவரது உறவினர்களான 3 பெண்களும் காரின் உள்ளே இருந்து உள்ளனர்.
கடையை நோக்கி தேவராஜ் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கார் நகர தொடங்கியது. இதை கண்டதும் காரில் இருந்த 3 பெண்களும் பதற்றத்தில் சத்தம் போட்டு அலறினர். அவர்களுடைய சத்தம் கேட்டு தேவராஜும், அக்கம் பக்கத்தினரும் சுதாரித்து வருவதற்குள் அருகில் உள்ள 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று காயம் அடைந்த 3 பேரையும் காரில் இருந்து பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.