பங்களாப்புதூர் அருகே பயங்கரம் சொத்து தகராறில் தம்பி அடித்துக்கொலை; அண்ணன் கைது
பங்களாப்புதூர் அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
அண்ணன்-தம்பி
சத்தியை அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுடைய மகன்கள் சஞ்சீவி காந்தி (வயது 43), நாகராஜ் (38). இதில் சஞ்சீவி காந்திக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும், சிவானி (7) என்ற மகளும் உள்ளனர்.
சஞ்சீவி காந்தி கோபி அருகே உள்ள சின்னகுளம் என்ற பகுதியில் தங்கியிருந்து எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
நாகராஜுக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் பெற்றோருடன் தங்கியிருந்து சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார்.
சொத்து தகராறு
சஞ்சீவி காந்திக்கும், அவருடைய தம்பி நாகராஜுக்கு இடையே சொத்து பிரிப்பதில் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சஞ்சீவி காந்தி அண்ணாநகருக்கு சென்று தனக்கு சொந்தமான பரம்பரை சொத்தை பிரித்து தருமாறு நாகராஜுவிடம் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சஞ்சீவி காந்தி நாகராஜின் மார்பு பகுதியில் அடித்துள்ளார். இதனால் அவர் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.
கொலை
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த நாகராஜ் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சஞ்சீவி காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறில் உடன் பிறந்த தம்பியை, அண்ணனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.