பவானிசாகர் அருகே பண்ணை வீட்டில் ரூ.27 லட்சம் திருடியதாக 3 பேர் கைது


தினத்தந்தி 24 Sep 2022 7:30 PM GMT (Updated: 24 Sep 2022 7:30 PM GMT)

3 பேர் கைது

ஈரோடு

பவானிசாகர் அருகே பண்ணை வீட்டில் ரூ.27 லட்சம் திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ரூ.27 லட்சம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவினாசிகவுண்டர் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68). இவருடைய விவசாய நிலமும், பண்ணை வீடும் பவானிசாகர் அருகே உள்ள இந்திரா நகரில் உள்ளது. இந்த வீட்டில் முத்துசாமி தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி பண்ணை வீட்டில் உள்ள பீரோவில் ரூ.27 லட்சம் வைத்துவிட்டு திருப்பூர் சென்றுவிட்டார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.27 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துசாமி பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தார்கள்.

3 பேர் கைது

இந்தநிலையில் போலீஸ் விசாரணையில், முத்துசாமியிடம் கார் டிரைவராக வேலை பார்த்த தர்மபுரியை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வெங்கடேஷ், தர்மபுரியை சேர்ந்த அரூரை சேர்ந்த தமிழ்செல்வன், (27), அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனின் உறவினர் மணிகண்டன் (29) ஆகியோர் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 26 லட்சத்து 8 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தார்கள்.


Next Story