பவானிசாகர் அருகே நாயை கடித்து கொன்ற சிறுத்தை; விவசாயிகள் அச்சம்


பவானிசாகர் அருகே   நாயை கடித்து கொன்ற சிறுத்தை;  விவசாயிகள் அச்சம்
x

பவானிசாகர் அருகே நாயை சிறுத்தை கடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருகே நாயை சிறுத்தை கடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

விவசாயி

பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). விவசாயி.

இவர் தன்னுடைய தோட்டத்தில் மல்லிகைப்பூ செடி பயிரிட்டுள்ளார். மேலும் தனது தோட்டத்தில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை காவல் காப்பதற்காக நாயும் வளர்த்து வருகிறார். தினமும் காலை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு மல்லிகை பூக்களை பறிக்க செல்வது வழக்கம்.

நாய் இறந்து கிடந்தது

அதன்படி நேற்று காலை வழக்கம்போல் மல்லிகை செடியில் பூக்களை பறிப்பதற்காக செல்வம் மற்றும் பூப்பறிக்கும் தொழிலாளர்கள் சென்றனர். அப்போது மல்லிகைப்பூ தோட்டத்தில் அவர் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்தது. இதனால் இரவில் தோட்டத்துக்கு வந்த ஏதோ விலங்கானது அங்கு இருந்த நாயை கடித்துக்கொன்று உள்ளது. பின்னர் அந்த நாயின் உடலை பாதி தின்றுவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றதும் அவருக்கு தெரியவந்தது.

சிறுத்தையின் கால் தடம்

உடனே அவர் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நாயை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் அந்த பகுதியில் தானியங்கி கண்காணிப்பு ேகமரா பொருத்தப்பட்டது.

விவசாயிகள் அச்சம்

தோட்டத்துக்குள் புகுந்து நாயை சிறுத்ைத கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கால்நடைகளை கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story