பவானிசாகர் அருகேதந்தை கண்முன்னே ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட மாணவர்;கதி என்ன? தேடும் பணி தீவிரம்
பவானிசாகர் அருகே தந்தையின் கண்முன்னே ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட மாணவர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே தந்தையின் கண்முன்னே ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட மாணவர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆற்றில் குளித்த மாணவர்
பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கிரசர்மேட்டை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன்கள் யாகேஷன் (வயது 13), சபரீசன் (11). இதில் யாகேஷன் கோடேபாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் குமார் நேற்று மதியம் 1 மணி அளவில் சபரீசனையும், யாகேஷனையும் அருகே அணைத்துறையில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க அழைத்து சென்றார். பின்னர் 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது யாகேஷன் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
இழுத்து செல்லப்பட்டார்
இதனால் யாகேஷன் தந்தை கண்முன்னே தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். உடனே குமார் தன்னுடைய மகனை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்மாசை மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
தகவல் கிடைத்து சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று யாகேஷசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை தேடியும் யாகேஷனை கண்டுபிடிக்க முடியவில்லை. இருள் சூழ்ந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது. ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட யாகேஷனின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக யாகேஷனை தேடும் பணி நடக்கிறது.