பவானிசாகர் அருகேசந்தன மரம் வெட்டி கடத்தல்;கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது
பவானிசாகர் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்திய கணவன், மனைவி உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்திய கணவன், மனைவி உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சந்தன மர துண்டுகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதி வெள்ளியம்பாளையம். பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் வெள்ளியம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் ஆலை அருகே சந்தேகப்படும் வகையில் ஸ்கூட்டரில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர்.
உடனே அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த சாக்குப்பையில் வெட்டப்பட்ட சந்தன மரத்தின் 9 துண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் அவை 40 கிலோ ஆகும். உடனே அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணையில், 'அவர்கள் பவானிசாகர் அருகே உள்ள பனையம்பள்ளி சொலவனூரை சேர்ந்த சின்னதம்பி (வயது 37), அவருடைய மனைவி பெரியம்மாள் (35), தொப்பம்பாளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜேஷ்குமார் (22) என்பதும், அவர்கள் நீண்ட நாட்களாக பண்ணாரி அடுத்த ராஜன்நகர், கே.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புறம்போக்கு மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டா இடங்களில் உள்ள சந்தன மரங்களை யாருக்கும் தெரியாமல் வெட்டி துண்டுகளாக்கி கடத்தி வந்தது,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தவுடன், அவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட சந்தன மரத்தின் துண்டுகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.