பவானிசாகர் அருகே பண்ணை வீட்டில் வைத்திருந்த ரூ.27 லட்சம் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
பவானிசாகர் அருேக பண்ணை வீட்டில் வைத்திருந்த ரூ.27 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பண்ணை வீடு
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம்அருகே உள்ள அவினாசிகவுண்டர் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68). விவசாயி. இவருடைய விவசாய நிலம் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இந்திரா நகரில் உள்ளது. வக்கில் தோட்டம் என்று அழைக்கப்படும் முத்துசாமியின் தோட்டத்தில் பண்ணை வீடும் இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் முத்துசாமி தங்கியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 9-ந் தேதி பண்ணை வீட்டில் இருக்கும் படுக்கை அறை பீரோவில் ரூ.27 லட்சத்தை வைத்து பூட்டி வைத்திருந்ததாக தெரிகிறது.
அதிர்ச்சி
இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மாலை முத்துசாமி பண்ணை வீட்டை பூட்டி விட்டு திருப்பூர் சென்று விட்டார். அப்போது அவர் மறதியாக பீரோவை பூட்டாமல் ெசன்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணியளவில் தோட்டத்தில் வேலை செய்யும் தங்கராஜ் என்பவர் முத்துசாமியை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டின் பின்புறம் ஏணி சாத்தப்பட்டு இருப்பதாக கூறினார். இதனால் சந்தேகமும், அதிர்ச்சியும் அடைந்த முத்துசாமி உடனே தோட்டத்து வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார்.
வலைவீச்சு
அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.27 லட்சமும் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் முத்துசாமி பண்ணை வீட்டில் இல்லாததை அறிந்து ஏணியை வைத்து வீட்டின் பின்பக்கம் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார். ஏற்கனவே பீரோ பூட்டாமல் இருந்ததால் மர்ம நபர் ரூ.27 லட்சத்தையும் திருடிச்சென்றது தெரிந்தது.
இதுகுறித்து முத்துசாமி உடனே பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து ரூ.27 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.