போடி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
போடி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி அருகே சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து பெட்டிபுரம் ஊராட்சி தலைவர், சின்னமனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வாரத்திற்குள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று போலீசார் கூறினர். ஆனால் சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தங்கள் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்துவோம் என்று கூறி விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.