சென்னிமலை அருகே வயதான தம்பதியை கொலை செய்தவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு


தினத்தந்தி 11 Sept 2023 2:58 AM IST (Updated: 11 Sept 2023 3:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே வயதான தம்பதியை கொலை செய்தவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே வயதான தம்பதியை கொலை செய்தவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கொலை

சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர் அருகே உள்ள ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 85). விவசாயி. இவருடைய மனைவி சாமியாத்தாள் (74). இவர்கள் 2 பேரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இவர்களுடைய வீட்டுக்கு கடந்த 8-ந் தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து உள்ளனர். பின்னர் அவர்கள், முத்துசாமி மற்றும் அவருடைய மனைவி சாமியாத்தாள் ஆகியோரை தாக்கி படுகொலை செய்தனர். மேலும் சாமியாத்தாள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 தனிப்படைகள் அமைப்பு

இந்த நிலையில் வயதான தம்பதியை கொலை செய்தவர்களை பிடிக்க ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தனிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (சென்னிமலை), ஜெயமுருகன் (அறச்சலூர்), ஆனந்த் (கொடுமுடி), சோமசுந்தரம் (ஈரோடு தாலுகா), முருகன் (ஈரோடு டவுன்) மற்றும் வடிவேல் குமார் (பங்களாப்புதூர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தனிப்படை போலீசார் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் சென்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story