சென்னிமலை அருகே வனத்துறையின் அறிவிப்பை மீறிஉணவு வைப்பதால் விபத்தில் சிக்கி பலியாகும் குரங்குகள்
சென்னிமலை அருகே வனத்துறையினரின் அறிவிப்பையும் மீறி உணவு வைப்பதால் குரங்குகள் விபத்தில் சிக்குகின்றன.
சென்னிமலை
சென்னிமலை அருகே வனத்துறையினரின் அறிவிப்பையும் மீறி உணவு வைப்பதால் குரங்குகள் விபத்தில் சிக்குகின்றன.
குரங்குகளுக்கு உணவு
சென்னிமலை முருகன் கோவில் வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் உள்ள செலம்பகவுண்டன்பாளையம் வரை 8 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி நீண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் மான்கள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. சென்னிமலை-ஊத்துக்குளி ரோடு வழியாக செல்பவர்கள் பழனியாண்டவர் கோவில் பகுதியில் குரங்குகளுக்கு பழங்கள் மற்றும் உணவுகளை கொடுத்து வருவதால் வனப்பகுதியில் சுற்றி திரிந்த குரங்குகள் ரோட்டுக்கு வந்து வாகனங்களில் அடிபடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
குரங்குகளுக்கு யாரும் உணவு வைக்க கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
அடிபட்டு இறக்கின்றன...
இந்த அறிவிப்புகளையும் மீறி அந்த வழியாக செல்பவர்கள் குரங்குகளுக்கு காய்கறி மற்றும் பழங்களை கொடுத்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ள இடத்தில் ஒரிரு குரங்குகளுக்கு மட்டும் பழங்களை கொடுப்பதால் மற்ற அனைத்து குரங்குகளும் திடீரென உணவுக்காக ரோட்டுக்கு ஓடி வருகின்றன. அப்போது அவைகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 'வனப்பகுதியில் கிடைக்கும் இயற்கை உணவுகளை உண்டு வந்த குரங்குகளுக்கு இந்த வழியே செல்பவர்கள் காய்கறி மற்றும் பழங்களை கொடுத்து பழக்கப்படுத்தியதால் குரங்குகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் ரோட்டிலேயே மனிதர்களுக்காக காத்திருக்கிறது. இதனால் வேகமாக செல்லும் வாகனங்களில் குரங்குகள் அடிபட்டு இறந்து விடுகின்றன. ஒரு குரங்கு இறந்து விட்டால் மற்ற அனைத்து குரங்குகளும் ரோட்டில் ஆக்ரோஷமாக திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே வனத்துறையின் அறிவிப்பையும் மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.