சென்னிமலை அருகேஒரே நாளில் 2 இடங்களில் தீ விபத்து
தீ விபத்து
சென்னிமலை அருகே ஒரே நாளில் 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
சென்னிமலை பகுதியில் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
நேற்று சென்னிமலை அருகே ஒரே நாளில் பனியம்பள்ளி மற்றும் முருங்கத்தொழுவு பகுதியை அடுத்த அஞ்சுராம்பாளையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வறண்டு கிடந்த புல் மற்றும் செடி, கொடிகளில் தீ பிடித்துள்ளது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் அஞ்சுராம்பாளையம் பகுதிக்கு தீயணைப்பு வண்டி செல்ல முடியாததால் இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
45 இடங்களில்...
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 'சென்னிமலை பகுதியில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 45 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக நாங்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளோம். சில இடங்களில் தீயணைப்பு வண்டி செல்ல முடியாததால் இலை, தழைகளை கொண்டு தீயை அணைத்து வருகிறோம். பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் அதனை அணைக்காமல் வீசி விட்டு செல்வதால் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
இலவசமாக தண்ணீர்
சென்னிமலை தீயணைப்பு வண்டிக்கு சென்னிமலை அருகே கணபதிபாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பணம் ஏதும் பெறாமல் இதுவரை தனது கிணற்றில் இருந்து இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார். மற்ற ஊர்களில் பணம் கொடுத்து தான் தீயணைப்பு வண்டிக்கு தண்ணீர் வாங்கப்பட்டு வருகிறது. இனி வறட்சி காலம் என்பதால் கிணற்றில் தண்ணீர் குறையும்.
அதனால் சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பெரிய மேல்நிலை தொட்டியில் இருந்து தீயணைப்பு வண்டிக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்,' என்றனர்.