சென்னிமலை அருகே தெரு நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு


சென்னிமலை அருகே தெரு நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு
x

புள்ளிமான் சாவு

ஈரோடு

சென்னிமலை அருகே தெரு நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.

புள்ளி மான்கள்

சென்னிமலை முருகன் கோவில் உள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் காணப்படுகின்றன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், புள்ளிமான்களுக்கு வனத்துறை சார்பில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில புள்ளிமான்கள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்கு தண்ணீரைத் தேடி செல்வதுண்டு.

தெரு நாய் கடித்தது

இந்த நிலையில் நேற்று காலையில் சென்னிமலை அய்யம்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வெளியேறி தண்ணீர் தேடி அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று புள்ளி மானை துரத்தி சென்று கடித்து குதறியது. இதனால் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் சென்னிமலை கால்நடை டாக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து இறந்து கிடந்த புள்ளிமானின் உடலை கால்நடை டாக்டர் விஜயகுமார் பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து அந்த புள்ளிமான் அங்குள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் விஜயகுமார் கூறுகையில், 'இறந்த புள்ளிமான் சுமார் 5 வயது உடைய ஆண் புள்ளிமான் ஆகும்,' என்றார்.


Next Story