சென்னிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
சென்னிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனா்.
சென்னிமலை
சென்னிமலை அருகே சிறுக்களஞ்சி ஊராட்சிக்குட்பட்ட தளவாய்பாளையம் புதூர் என்ற கிராமத்தின் வழியாக சென்று அங்குள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை கடந்தால் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சியை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. 40 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையை சிறுக்களஞ்சி ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த சாலையின் ஒரு பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும், அது சம்பந்தமாக சிறுக்களஞ்சி ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியும், ஊராட்சி தலைவரை கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் கிழக்குதோட்டம் புதூர், பாறைகாட்டுப்புதூர், பனப்பாளையம், சின்ன காட்டுப்பாளையம், சாலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியபடி சிறுக்களஞ்சி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அங்கு சென்று முற்றுகையிட வந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தி சாலை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.