சென்னிமலை அருகே கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள்
கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2,300 ஆண்டுகளுக்கு முன்பு...
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ளது கொடுமணல் கிராமம்.
இங்கு சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன் பெரிய அளவில் தொழில்துறைகளும், வியாபாரங்களும் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்ததால் 1981-ம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதியில் இதுகுறித்து பல்வேறு ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது.
பழங்கால பொருட்கள்
இதில் முக்கியமாக தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில் 2020-ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்ட 8-வது அகழாய்வின் போது தான் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்தது.
இந்த அகழாய்வில் தொழிற்கூடங்கள் மற்றும் கொல்லுப்பட்டரைகள் இருந்த பகுதி, பழங்கால ஈமச்சின்னங்கள் எனப்படும் கல்லறைகள் இருந்த பகுதி, கிணற்று படிக்கட்டுகள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் போன்ற இரும்பு பொருட்கள், நூற்றுக்கணக்கான கல்மணிகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், நாணயங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
அருங்காட்சியகம்
கொடுமணலில் இப்படி தோண்ட, தோண்ட பழங்கால வரலாற்று பொக்கிஷங்கள் கிடைத்தாலும் இவை அனைத்தும் தோண்டும் வரைதான் பேசப்படுகிறது. அதன்பிறகு யாருக்கும் இது பற்றி தெரிவதில்லை.
எனவே வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் நிரந்தரமாக அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எஸ்.சிவசண்முகம்
இதுகுறித்து கொடுமணலை சேர்ந்த விவசாயி எஸ்.சிவசண்முகம் என்பவர் கூறுகையில், '1981-ம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதியில் பல்வேறு தரப்பினரின் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்து உள்ளது. எனினும் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அதன் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில் நடந்த அகழாய்வில்தான் ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்களை எடுத்துள்ளனர். அகழாய்வு பணிகள் நடைபெறும் போது மட்டும் இந்த பழங்கால சின்னங்கள் குறித்து மக்களுக்கு தெரிகிறது. அதன்பிறகு யாருக்கும் இதுபற்றி தெரிவதில்லை. பல ஊர்களில் இருந்து அகழாய்வு நடைபெற்ற இடங்களை காண கொடுமணலுக்கு வருகின்றனர். ஆனால் அகழாய்வு முடிந்து மூடப்பட்ட குழியை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதனால் இதுவரை அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களில் ஆய்வுக்கு எடுத்து கொண்டது போக மீதி பொருட்களில் முக்கியமானவற்றை வைத்து கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கொடுமணலில் நூற்றாண்டுகள் பழமையான அத்தனூர் அம்மன் கோவில் உள்பட ஒருசில பழமையான கோவில்களும் உள்ளது. இந்த கோவில்கள் குறித்தும் அகழாய்வு செய்ய வேண்டும்,' என்றார்.
லட்சுமி
கொடுமணலில் அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற பெண் கூறும்போது, 'திருப்பூர் சாயக்கழிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான கொடுமணல் கிராமத்திற்கு வேறு வகையில் பெருமை சேர்ப்பது இந்த அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் தான்.
இந்த பொருட்களை உள்ளூரில் வசிப்பவர்களே பல பேர் பார்க்காமல் உள்ளனர்.
அதனால் அருங்காட்சியகம் அமைத்தால் இதன் வரலாறு குறித்து பல பேர் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இங்கு நடந்த அகழாய்வின் போது உள்ளூர் மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்தது. இதனால் இங்கு மற்ற இடங்களிலும் அகழாய்வு பணிகளை தொடங்கினால் இன்னும் பழங்கால பொருட்கள் கிடைப்பதுடன் இங்குள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்,' என்றார்.
ஆசிரியர் ராமசாமி
கொடுமணல் அருகே ஓலப்பாளையத்தில் வசிக்கும் அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர் ராமசாமி என்பவர் கூறுகையில், 'பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் என்னென்ன பொருட்களை பயன்படுத்தி எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான முழு ஆதாரங்கள் கொடுமணலில் கிடைத்துள்ளது. இந்த விபரங்களை ஆசிரியர்களான நாங்கள் புத்தகத்தை காட்டி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதை விட மாணவர்களை நேரடியாக அழைத்து சென்று காண்பித்தால் மிகவும் ஆர்வத்துடன் தெரிந்து கொள்வார்கள். பண்டை தமிழர் நாகரிகம் என்பது வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும். அதனால் இந்த நாகரிகத்தை பற்றி வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள கொடுமணலில் கிடைத்த பழங்கால பொருட்கள் மூலம் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும்,' என்றார்.
தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித்
தமிழக தொல்லியல் துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் கூறியதாவது:-
கொடுமணலில் கிடைத்த முக்கிய பழங்கால பொருட்களை ஆய்வு செய்ய சென்னை எழும்பூரில் உள்ள தொல்லியல் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் பழங்கால ஈமச்சின்னம் இருந்த பகுதியில் கிடைத்த ஒரு மனித மண்டை ஓட்டை எடுத்து அதனை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பாதுகாப்புடன் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுகள் குறித்த விபரங்கள் இன்னும் 6 மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கொடுமணல் அகழாய்வில் பழங்கால படிக்கட்டுகள் கண்டு பிடித்தது முக்கியமான ஒன்றாகும். இந்த ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் ஆய்வுக்கு பிறகு மூடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் ஏதாவது கட்டிடங்கள் கட்டி விட்டால் மீண்டும் குழி தோண்ட முடியாது. அதனால் இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டால் ஆய்வை தொடருவோம்,' என்றார்.