சென்னிமலை அருகே தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்


சென்னிமலை அருகே  தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்
x

சென்னிமலை அருகே தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தடுப்பணை

சென்னிமலை அருகே மேற்கு புதுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த பணி 3 மாதங்களில் நிறைவு பெற்றது. மேலும் இந்த தடுப்பணை அருகிலேயே 2 கிணறுகள் தோண்டப்பட்டது.

பின்னர் இந்த கிணறுகளில் இருந்து மின் மோட்டார்களை பயன்படுத்தி புதுப்பாளையம், ஓட்டப்பாறை, பனியம்பள்ளி மற்றும் பாலதொழுவு ஆகிய 4 ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி 3-வதாக ஒரு கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கிணற்றில் இருந்து முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்ட பணியை சமீபத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

மதகு மூலம்...

இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் சென்னிமலை அருகே பல இடங்களில் தண்ணீர் தேங்கி சென்றது.

இதனால் கீழ்பாவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் இருக்க சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் உள்ள முதலைமடை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து மதகு மூலம் உபரி நீா் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக அதே பகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகர் தடுப்பணை தண்ணீர் சென்றது.

உபரிநீர் வெளியேற்றம்

இதையடுத்து தடுப்பணை நிரம்பி அதில் இருந்து கடந்த 3 நாட்களாக உபரிநீர் வெளியேறுகிறது. மேலும் தடுப்பணை அருகில் உள்ள கிணறுகளும் நிரம்பி உள்ளது. இதனால் புதுப்பாளையம், ஓட்டப்பாறை, பனியம்பள்ளி, பாலதொழுவு ஆகிய 4 ஊராட்சி பகுதிகளுக்கும் தங்கு, தடையின்றி குடிநீர் கிடைக்கும் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த 4 ஊராட்சி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் அ.பரமேஸ்வரன் ஆகியோர் தடுப்பணையை பார்வையிட்டு அங்கு வசிப்பவர்களிடம் தண்ணீர் நிரம்பியுள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். தடுப்பணை கட்டப்பட்ட 1½ ஆண்டுகளில் 2-வது முறையாக ஜெ.ஜெ.நகர் தடுப்பணை நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story