சென்னிமலை அருகே பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னிமலை அருகே பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னிமலை
சென்னிமலை அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து பால் ஊற்றி வருகின்றனர். இந்த சங்கத்தில் செயலாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஒருவர் தனது பணி காலத்தில் போலியான உறுப்பினர்கள் பெயரிலும், இறந்தவர்கள் பெயரிலும் பால் கொள்முதல் செய்ததாக வரவு - செலவு செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் முறைகேடு செய்து விட்டதாக சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்த நிலையில், போலியாக வரவு - செலவு செய்து முறைகேடு செய்த முன்னாள் சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ராமலிங்கபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க உறுப்பினர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.