சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னிமலை அருகே ஓட்டக்குளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமையில் திரளான விவசாயிகள் ஒன்று கூடினார்கள்.
பின்னர் அவர்கள் வாய்க்கால் கரையில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைவில் முடித்து வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும். அரசாணை எண் 276-ஐ ரத்து செய்வதுடன் மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.
முற்றுகையிட முடிவு
மரங்கள் மற்றும் மண் கடத்தலை தடுக்க வேண்டும். சீரமைப்பு என்ற பெயரில் குடிநீர் ஆதாரத்தை நீர்வளத்துறையினர் அழிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இறுதியாக வருகிற 11-ந் தேதி ஈரோட்டில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிடுவது என முடிவு செய்தனர்.