சேத்தியாத்தோப்பு அருகே பெட்ரோல் ஊற்றி பெண்ணை கொல்ல முயற்சி மருமகள் கைது


சேத்தியாத்தோப்பு அருகே  பெட்ரோல் ஊற்றி பெண்ணை கொல்ல முயற்சி  மருமகள் கைது
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே பெட்ரோல் ஊற்றி பெண்ணை கொல்ல முயன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி சிந்தாமணி(வயது 65). இவர்களுடைய மகன் வேல்முருகன்(45). இவர் தனது அக்காள் மலர்க்கொடியின் மகளான சங்கீதா(31) என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகன், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து அங்கு கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேல்முருகனுக்கும், சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு சங்கீதா தட்டானோடையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து உறவினர்கள் சங்கீதாவை சமாதானப்படுத்தி பெரியநற்குணம் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர், அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

கொல்ல முயற்சி

இதனை சிந்தாமணி, தனது மகன் வேல்முருகனிடம் கூறியதாக கருதிய சங்கீதா, எங்களுக்குள் தகராறு நடப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி, வீட்டில் பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சிந்தாமணி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த சிந்தாமணி வலியால் அலறித்துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிந்தாமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருமகள் கைது

இதுகுறித்த தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை கைது செய்தனர். மாமியாரை மருமகளே கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story