சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் தத்தளிக்கும் கிராமங்கள் மக்கள்அவதி
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
அண்ணாமலை நகர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடும் போதெல்லாம் கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அதிலும் குறிப்பாக சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களை அவதியுற வைக்கிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 5-வது முறையாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஊருக்குள் புகுந்த வெள்ளம்
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரிநீர் கல்லணை, கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிதம்பரம் அருகே கொடியம்பாளையத்தில் கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.
பாதுகாப்பு மையங்களில் தஞ்சம்
அந்த வகையில் சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரையோரம் உள்ள பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், கீழத்திருக்கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, சின்னக்காரமேடு, பெரியக்காரமேடு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, புயல் பாதுகாப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் அதிகளவு தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
கயிறு கட்டி செல்லும் மக்கள்
மேலும் மேலத்திருக்கழிப்பாலை, பெரியக்காரமேடு, கீழப்பிரம்பை, சின்னக்காரைமேடு உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல் இளந்திரைமேடு பகுதியில் இருந்து கொடியம்பாளையம் செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள், சாலையில் கயிறு கட்டியும் கட்டையை பிடித்தபடியும் செல்கின்றனர். இதற்கிடையே சிதம்பரம் அருகே உள்ள மேலத்திருக்கழிப்பாலை, கீழத்திருக்கழிப்பாலை ஆகிய பகுதிகளை சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.