சிதம்பரம் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு


சிதம்பரம் அருகே  ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு  மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர். செல்வம். இவருடைய மனைவி பிரேமா(வயது 47). இவர்கள் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டனர். இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் அருகே கிள்ளை ரெயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பிரேமா கை கழுவும் இடத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென பிரேமா கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்தார். இதில் திடுக்கிட்ட அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றார்.

வலைவீச்சு

இதையடுத்து அந்த ரெயில் சிதம்பரம் சென்றதும், பிரேமா குடும்பத்தினர் ரெயிலில் இருந்து இறங்கி ரெயில்வே போலீசாரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர். பின்னர் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் அந்த நபரை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story