சின்னமனூர் அருகேமர்ம நோய் தாக்கி 20 பசுக்கள் சாவு


சின்னமனூர் அருகேமர்ம நோய் தாக்கி 20 பசுக்கள் சாவு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே மர்ம நோய் தாக்கி 20 பசுக்கள் இறந்தன.

தேனி

நோய் தாக்குதல்

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலை பகுதி அமைந்துள்ளது. சுமார் 33 ஆயிரம் எக்டேர் தேயிலை தோட்டம் அமைந்துள்ள இந்த பகுதி தனியார் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மேகமலை முதல் இரவங்கலாறு வரை உள்ள ஏழுமலை கிராமங்களில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் சிலா் தோட்டங்களில் வேலை பார்ப்பதுடன், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பசுக்களை வளர்த்து அதன் மூலம் பால் விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் வளர்த்து வந்த பசுக்கள் திடீரென உணவு அருந்தாமல் இருந்தன. அதற்கு மருந்து ஏதும் கொடுத்தாலும் நோய் சரியாகவில்லை. மேலும் அதன்பிறகு நோய் தாக்கி இறந்தன. ஆனால் அது என்ன நோய் என்று தெரியவில்லை.

20 மாடுகள் சாவு

இந்நிலையில் நேற்று முன்தினம் 3 பசுக்கள் இறந்தன. தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட பசுக்கள் நோய் தாக்கி இறந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நோய் தாக்கி உள்ள பசுமாடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இறந்த மாடுகளை பரிசோதனை செய்தனர்.

ஆனால் அவர்களிடம் கேட்டபோது இறப்பின் காரணம் தெரியவில்லை என்று கூறினர். இதனால் பசுக்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். மர்ம நோய் தாக்கி பசுக்கள் உயிரிழப்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story