சித்தோடு அருகே பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து
சித்தோடு அருகே உள்ள பஞ்சு அரவை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.
பவானி
சித்தோடு அருகே உள்ள பஞ்சு அரவை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.
பஞ்சு அரவை ஆலை
பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள செல்லப்பம்பாளையம் பகுதியில் பஞ்சு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை பெரிய மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (37) நடத்தி வருகிறார்.
இங்கு பனியன் கழிவுகளை மொத்த விலைக்கு எடுத்து வந்து அவற்றை அரைத்து வீடு துடைக்கும் துடைப்பான், கால் மிதியடி போன்றவையும் தயாரிக்கப்படுகிறது. சுமார் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தீ விபத்து
இந்த நிலையில் சித்தோடு பகுதியில் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும் நேற்று விடுமுறை என்பதால் ஆலை மூடப்பட்டு கிடந்தது.
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் ஆலையில் இருந்து கரும்புகை வெளி வந்துள்ளது. சிறிது நேரத்தில் ஆலை தீப்பிடித்து எரிய தொடங்கியது.
மளமளவென பரவிய தீ அங்குள்ள பனியன் கழிவுகள், பஞ்சு மூட்டைகள், எந்திரத்தின் மீதும் பிடித்து எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் இது பற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
லட்சக்கணக்கான பொருட்கள் நாசம்
மேலும் தகவல் கிடைத்து ஆலை நிர்வாகத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது ஆலையில் தீ கொழுந்துவிட்டு் எரிந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எந்திரம், பனியன் கழிவுகள், பஞ்சுகள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.