கடலூர் அருகே இரும்பு கடை காவலாளி மீது கொலைவெறி தாக்குதல் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

கடலூர் அருகே இரும்பு கடை காவலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த குமராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தோட்டப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிர்புறத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் குமராபுரத்தை சேர்ந்த முருகையன் (வயது 59) என்பவர் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முருகையன் வந்ததும், ஆனந்தன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறப்பதற்காக ஆனந்தன் வந்தார். அப்போது காவலாளி முருகையன், தலையில் வெட்டு காயத்துடன், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகையனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொலைவெறி தாக்குதல்
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முருகையன் கடையில் இருந்தபோது, மர்மநபர்கள் கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் அவர்களை முருகையன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் கிடந்த மண்வெட்டி மற்றும் இரும்பு குழாய்களால் முருகையனின் தலை உள்ளிட்ட பகுதிகளில் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அதுமோப்பம் பிடித்தபடி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
2 பேரை பிடித்து விசாரணை
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.