கூடலூர் அருகேவைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை


கூடலூர் அருகேவைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கூடலூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் கழுதை மேடு புலம் உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப்பயிறு, அவரை, மொச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் புது ரோடு பகுதி வரை அரசு டவுன் பஸ்சில் வருகின்றனர். பின்னர் அங்கிருந்து முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைரவன் வாய்க்கால் பாலம் வழியாக தங்களது விளை நிலங்களுக்கு நடந்து செல்கின்றனர்.

விவசாய பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் அந்த பாலம் வழியாகவே நடந்து கூடலூருக்கு வருகின்றனர். இந்த வைரவன் வாய்க்கால் பாலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பாலத்தில் கைப்பிடி கம்பிகள் துருப்பிடித்து பெயர்ந்து கீழே விழுந்து விட்டன. இதனால் அந்த வழியாக சென்று வரும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் தங்கள் விளை பொருட்களை இந்த பாலத்தின் வழியாக கொண்டு வரும் விவசாயிகள் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். சில நேரங்களில் பலத்த காற்று வீசினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழ வேண்டிய நிலை உள்ளது. எனவே வைரவன் வாய்க்கால் பாலத்தில் கைப்பிடி தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story