கூடலூர் அருகேதனியார் தென்னந்தோப்பில் மணல் குவியல்:அதிகாரிகள் ஆய்வு
கூடலூர் அருகே தனியார் தென்னந்தோப்பில் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கூடலூர் வெட்டுக்காடு அருகே தனியார் தென்னந்தோப்பில் மணல் பதுக்கி வைத்து இருப்பதாக லோயர்கேம்ப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது தென்னந்தோப்பில் மணல் குவியல், குவியலாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கம்பம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் பிரேம்ராஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிகாரிகளுடன், அங்கு விரைந்து சென்றார். அப்போது 80 மணல் குவியல்கள் இருந்தது. அதன்மேல் தென்னை மட்டை, ஓலைகளை வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த மணல் முல்லைப்பெரியாற்றில் இருந்து அள்ளி வந்து குவிக்கப்பட்டுள்ளதா? என பொதுப்பணி துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். ஆற்றில் இருந்து மணல் அள்ள அனுமதி இல்லாத நிலையில் இந்த பகுதியில் மணல் குவித்து வைத்திருப்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.