கூடலூர் அருகேவாய்க்காலில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு:பொதுமக்கள் அவதி
கூடலூர் அருகே வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
கூடலூர் அருகே தாமரைகுளம், சிறுகுளம், பி.டி.ஆர் வட்டம் ஒட்டாண்குளம், பொட்டிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது 2-ம் போக நெல் சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் உளுந்து, தட்டைப்பயறு வகைகளை சாகுபடி செய்துள்ளனர். சிலர் காணம், கொலஞ்சி, தக்கை பூண்டு, ஜலம்பு செடிகளை விதைத்து உள்ளனர்.
இந்நிலையில் கூடலூர் நகரப்பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் அரசு விதைப்பண்ணைக்கு செல்லும் சாலையில் வரத்து வாய்க்காலில் வந்து கலக்கிறது. இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீருடன் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் மற்றும் துணிகள், மதுபாட்டில்கள் கலந்து வருவதால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் நடந்து செல்லும் விவசாயிகள் மற்றும் நடைபயிற்சி செல்வோர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறையினர் வரத்து வாய்க்காலை சீரமைத்து கழிவுநீருடன் கலந்து வரும் குப்பைக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.