ஈங்கூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது; 3 பேர் காயம்


ஈங்கூர் ரெயில்வே மேம்பாலம் அருகே  2 லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது; 3 பேர் காயம்
x

சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் 2 டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் 2 டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேருக்கு நேர் மோதல்

சென்னிமலை அருகே பனியம்பள்ளியில் உள்ள கல்குவாரியில் இருந்து நேற்று டிப்பர் லாரி ஒன்று கருங்கற்களை ஏற்றிக்கொண்டு பெருந்துறைக்கு புறப்பட்டது. இந்த லாரியை ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 35) என்பவர் ஓட்டினார். மதியம் 12 மணி அளவில் சென்னிமலையை அடுத்த ஈங்கூர் ெரயில்வே மேம்பாலத்தில் ஏறுவதற்காக லாரியை திருப்பிய போது, ஈங்கூரில் இருந்து சென்னிமலை நோக்கி ஈங்கூர் கவுண்டனூரை சேர்ந்த மோகன் (வயது 37) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

3 பேர் காயம்

இந்த விபத்தில் 2 டிப்பர் லாரிகளும் கவிழ்ந்தன. இதில் சென்னிமலையை நோக்கி சென்ற டிப்பர் லாரி மேம்பால சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அந்த வழியே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. கருங்கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியில் இருந்து கருங்கற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

இந்த விபத்தில் லாரி டிரைவர்களான நாகராஜ், மோகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பெருந்துறை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனைத்து வாகனங்களையும் பெருந்துறை ஆர்.எஸ். வழியாக திருப்பி விட்டனர். பின்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு ரோட்டின் குறுக்கே கிடந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story