எட்டயபுரம் அருகே சொத்து பிரச்சினையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
எட்டயபுரம் அருகே சொத்து பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பலவேசம் மகன் சதுரகிரி (வயது 35). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மாரிமுத்து மகன் மாரியப்பன் (50) என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் சதுரகிரியின் வீட்டுக்கு சென்று அவருடைய வீட்டில் மின் இணைப்பு கொடுப்பதற்காக கட்டியிருந்த மின் ஒயரை அறுத்துள்ளார். அப்போது அங்கிருந்த சதுரகிரி, மாரியப்பனை எச்சரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் அரிவாளால் சதுரகிரியை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த சதுரகிரி எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக சதுரகிரி அளித்த புகாரின்பேரில் மாசார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார்.