கம்பம் நகராட்சி ஆணையர் குடியிருப்பு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கம்பம் நகராட்சி ஆணையர் குடியிருப்பு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கம்பம் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் குடியிருப்பு அருகே உள்ள காந்திஜி பூங்கா வடபுறம் சாலையை ஆக்கிரமித்து காய்கறி, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி ஆணையர் பாலமுருகன் உத்தரவிட்டார். அதன்பேரில், கட்டிட ஆய்வாளர் சலீம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். இந்நிலையில் சாலையோரத்தில் காய்கறி கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மாற்று இடம் தேர்வு செய்து தருமாறு நகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆணையர் குடியிருப்பை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.