கயத்தாறு அருகேவிவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறு அருகே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே விவசாய நிலத்தில் தனியார் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்கோபுரம்
கயத்தாறு அருகே ஆசூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த தளவாய்புரம் கிராமத்தில் நாற்கர சாலையில் தனியார் மின் கோபுர அமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் விவசாயிகளின் அனுமதி இன்றி நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட அக்காள், தம்பி ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அந்த 2 பேர் உடலில் தண்ணீரை ஊற்றி போலீசார் காப்பாற்றினர். பின்னர் கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பிச்சையா மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ் விவசாய சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் தளவாய்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டன. தகவல் அறிந்த கயத்தாறு தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாவட்ட கலெக்டரிடம் இப்பிரச்சினை குறித்து முறையிடுவதாகவும், மதுரை ஐகோர்டு கிளையில் நடைபெறும் வழக்கு குறித்து பேசப்படும் என்றும், அதுவரை மின்கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.