கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த பஞ்சாயத்து துணை தலைவர் சாவு


கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த பஞ்சாயத்து துணை தலைவர் சாவு
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த பஞ்சாயத்து துணை தலைவர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வடக்கு இலந்தைக்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் பரிதாபமாக இறந்து போனார்.

பஞ்சாயத்து துணைத்தலைவர்

கயத்தாறு அருகிலுள்ள வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்த முப்பிடாதி மூப்பனார் மகன் முத்தையா(வயது 55). இவர் வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், இவர் கடந்த 16-ந்தேதி இரவு 10மணியளவில் கயத்தாறில் இருந்து வடக்கு இலந்தைகுளத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கயத்தாறு சுங்கச்சாவடி அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயம்

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்தையா பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன முத்தையாவுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், முருகன் என்ற மகனும், சுப்புலட்சுமி காளீஸ்வரி ஆகிய 2மகள்களும் உள்ளனர்.


Next Story