கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி தொழிலாளி பலி
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி தொழிலாளி பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் பூக்கட்டும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பூக்கட்டும் தொழிலாளி
பசுவந்தனை துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகு சுந்தரம் மகன் எட்ராஜ் (வயது 22). பூக்கட்டும் தொழிலாளி. இவர் கயத்தாறில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் பூக்கட்டி விட்டு இவர் கயத்தாறிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். கடம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மோட்டார் சைக்கிள் இரட்டைக் குளம் பாலத்தில் மோதியது. பின்னர் குளத்திற்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட எட்டுராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். நேற்று காலையில் தகவல் அறிந்தவுடன் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பத்மா சீனிவாசன் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.