கயத்தாறு அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கயத்தாறு அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே செல்போன் டிஸ்பிளேயை மாற்ற தாயார் பணம் தராததாால், பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கிராமம் கீழ தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கேரள மாநிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி. இவர்களுடைய மகன் உதய பிரகாஷ் (வயது 17). இவர் கயத்தாறில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் தனது செல்போனின் டிஸ்பிளே சேதமடைந்ததால், அதனை புதிதாக மாற்றுவதற்காக தாயார் முத்துமாரியிடம் பணம் கேட்டார். ஆனால் தாயார் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் உதய பிரகாஷ் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
தற்கொலை
நேற்று காலையில் தாயார் முத்துமாரி வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றார். பின்னர் உதய பிரகாஷ் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த முத்துமாரி தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த உதய பிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கயத்தாறு அருகே சேதமடைந்த செல்போன் டிஸ்பிளேயை மாற்ற தாயார் பணம் தராததால், பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
----