கயத்தாறு அருகே விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியை முள்வேலியால் அடைக்க கூடாது என கிராம மக்கள் கோரிக்கை
கயத்தாறு அருகே விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியை முள்வேலியால் அடைக்க கூடாது என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயத்தாறு அருகே விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் அரசு சார்பில் முள்வேலியால் அடைப்பதை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 335 பேர் மனு கொடுத்தனர். பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
பயனாளிகளுக்கு உதவி
கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், ஓட்டப்பிடாரம் தாலுகா கடலோர கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, தூத்துக்குடிவ.உ.சி. துறைமுகபொறுப்புக் கழகத்தால் சமூகபொறுப்புநிதியின் கீழ் பயனாளிகளுக்கு தையல் எந்ந்திரங்களையும் வழங்கினார்.
முள்வேலி கூடாது
கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் விவசாய நிலத்துக்கு சென்று வருவதற்கு பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தோம். அதே போன்று புறம்போக்கு நிலத்தை நவதானியங்களை உலர வைக்கும் களமாகவும் பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தை சுற்றி முள்வேலி அமைக்கும் பணியை அரசு தொடங்கி உள்ளது. அந்த பகுதியில் மழைக்காலங்களில் உபரி நீர் செல்லக்கூடிய ஓடையும் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் உபரிநீர் விவசாய நிலங்களுக்கும் வரும் நிலை உள்ளது. அரசு அடைத்து உள்ள இடத்தை சுற்றி விவசாய நிலங்களுக்கு செல்ல மிகுந்த சிரமமாக உள்ளது. ஆகையால் அரசு உடனடியாக முள்வேலி அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சங்குகுளி தொழிலாளர்கள்
தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக சங்குகுளிப்போர் நலச்சங்க துணைத்தலைவர் தார்த்தீஸ் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திரேஸ்புரம் கடல் பகுதியில் சுமார் 600 தொழிலாளர்கள் சங்குகுளித்தலில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல சங்குகுளி தொழிலாளர்களும் தொழில் செய்து வருகின்றனர். நாங்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கவும் கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர்கள் திரேஸ்புரம் பகுதியில் சங்குகுளி தொழில் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.