கோபி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்;கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
கோபி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்ணை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கடத்தூர்
கோபி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்ணை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தவறி விழுந்தார்
கோபி அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி மல்லிகா. நேற்று காலை 5.30 மணி அளவில் மல்லிகா அந்த பகுதியில் உள்ள பொதுக்கிணற்றின் மீது உட்கார்ந்திருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது.
இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்தபடி கிணற்றில் தொங்கி கொண்டிருந்த மின் மோட்டார் கயிற்றை இறுக்க பிடித்துக்கொண்டார். பின்னர் அவர் 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என சத்தம் போட்டார்.
மீட்பு
அவருடைய சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று கிணற்றை எட்டி பார்த்தனர். அப்போது மின் மோட்டார் கயிற்றை பிடித்துக்கொண்டு மல்லிகா தத்தளித்தபடி இருந்ததை கண்டனர். உடனே அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
உடனே அவர்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிறு கட்டி மல்லிகாவை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மல்லிகா சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.