கடமலைக்குண்டு அருகேமேகமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கடமலைக்குண்டு அருகே மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கடமலைக்குண்டு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, பள்ளி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆனால் அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால் ஒரே நேரத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து குளித்துவிட்டு சென்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அருவிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. அதனால் வாகனங்களில் வரும் பொதுமக்கள் அருவிக்கு செல்ல 1 கிலோ மீட்டர் தூரம் கரடு, முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் அருவியில் பெண்களுக்கான உடை மாற்றும் அறை மற்றும் பாதுகாப்பு வேலிகள் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேகமலை அருவியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.