கடம்பூர் அருகேதோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை
கடம்பூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் காட்டு யானைகளை விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று கடம்பூர் அருகே உள்ள பூதிக்காடு மலைக்கிராமத்துக்கு வந்தது. பின்னர் அந்த காட்டு யானை அங்குள்ள சின்னசாமி என்பவருடைய விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது.
இதைத்தொடர்ந்து தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. ேமலும், தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பூசணிக்காய்களையும் மிதித்து சேதப்படுத்தியது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சத்தம் போட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி காட்டு யானை ஒன்று கிராமத்தையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. எனவே இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்து உள்ளனர்.