கடம்பூர் அருகே பலாப்பழத்தை பறித்து தின்ற காட்டு யானைவேடிக்கை பார்த்த கிராம மக்களை துரத்தியது
கடம்பூர் அருகே காட்டு யானை பலாப்பழத்தை பறித்து தின்றது
கடம்பூர் அருகே பலாப்பழத்தை பறித்து தின்ற காட்டு யானை, வேடிக்கை பார்த்த கிராம மக்களை துரத்தியது.
காட்டு யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன.
அவ்வாறு கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாகி விட்டது.
பலாப்பழத்தை சுவைத்தது
கடம்பூர் அடுத்த நடூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். விவசாயி. நேற்று மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டு யானை ராமரின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த ஒரு பலா மரத்தில் 2 முன்னங்கால்களையும் தூக்கி வைத்தது.
அதன்பிறகு பலாப்பழத்தை பறித்து சுவைக்க தொடங்கியது. இதுகுறித்து தகவல் பரவியதும் கிராமமக்கள் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டு விட்டனர். இதைப்பார்த்த ராமர் உடனே இதுகுறித்து கடம்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
அலறியடித்து ஓட்டம்
பின்னர் அவர்கள் பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது பட்டாசு சத்தத்தால் மிரண்ட யானை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்து கிராம மக்களை நோக்கி ஓடிவந்தது. அதனால் அவர்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து நீண்ட நேரம் போராடி யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.