கடம்பூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை விடிய, விடிய அட்டகாசம் வாழைகள் சேதம்
தோட்டத்துக்குள் புகுந்து யானை விடிய, விடிய அட்டகாசம்
கடம்பூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை விடிய, விடிய அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதில் வாழைகள் சேதம் அடைந்தது.
யானை அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகின்றன. கடம்பூர் ஏரி தோட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவருக்கு வீட்டையொட்டி விவசாய தோட்டம் உள்ளது. இங்கு அவர் 1½ ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை மற்றும் 1½ ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை வனப்பகுதியையொட்டி உள்ள செல்வத்தின் வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழைக்குருத்துகள் மற்றும் கரும்பை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி கொண்டிருந்தன.
வாழைகள் சேதம்
சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த செல்வம் திடு்க்கிட்டு் எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அங்கு யானை நின்று கொண்டு பயிரை சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பட்டாசு வெடித்தும், டார்ச் லைட் அடித்தும் யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் யானை அங்கிருந்து செல்லவில்லை. தோட்டத்துக்குள் சுற்றி திரிந்து வாழைகளையும், கரும்புகளையும் நாசப்படுத்தியது. நேற்று காலை விடிய, விடிய இது தொடர்ந்தது. இந்த நிலையில் காலை 7 மணி அளவில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானையால் சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான செவ்வாழை, கரும்பு பயிர் சேதம் அடைந்தது.