கடம்பூர் அருகே பெண் மர்ம சாவுஆர்.டி.ஓ. விசாரணை


கடம்பூர் அருகே பெண் மர்ம சாவுஆர்.டி.ஓ. விசாரணை
x

ஆர்.டி.ஓ. விசாரணை

ஈரோடு

கடம்பூர் அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

கருத்து வேறுபாடு

கடம்பூர் அருகேயுள்ள காடகநல்லி கரளயம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சிவக்குமார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள பால் பண்ணையில் சூப்பர் வைசராக வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு 11 மாதத்தில் ரோஹித் என்ற குழந்தை உள்ளது. சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

பெற்றோர் புகார்

இதனால் மகேஸ்வரி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி சென்று விடுவார். கணவர் சிவக்குமார் மனைவி மகேஸ்வரியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருவது வழக்கமாக நடந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் சிவக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து இருந்து உள்ளார்.

இதுதொடர்பாக சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரியின் பெற்றோர் புகாரும் அளித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி மகேஸ்வரி கணவர் சிவக்குமாருக்கு போன் செய்து இருவரும் சேர்ந்து வாழலாம், இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று தொவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று காடகநல்லி பகுதியை சேர்ந்த ஒருவர் சிவக்குமாருக்கு போன் செய்து மகேஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தன் மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிவக்குமார் கடம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று மகேஸ்வரியின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஆர்.டி.ஓ. விசாரணை

மேலும் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?, இல்லை இயற்கையாக இறந்தாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மகேஸ்வரி எப்படி இறந்தார்? என்று தெரியவரும் என கடம்பூர் போலீசார் தெரிவித்தனர்.

சிவக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.


Next Story