கழுகுமலை அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
கழுகுமலை அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த வாலிபருக்கு கோவில்பட்டி கோர்ட்டில் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கழுகுமலை அருகே பெண்ணை தாக்கி நகையை பறித்து சென்ற வழக்கில் ைகதான வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நகைபறிப்பு
கழுகுமலை ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 38). இவர் மனைவி சாந்தி (வயது 36). இவர் கடந்த ஆண்டு மே 10-ந்தேதி தன்னுடைய உடைந்த தங்க கம்மலை சரி செய்வதற்காக நகை பட்டறைக்கு சென்றார். அங்கு இருந்த ஊழியர் 2 மணி நேரம் ஆகும் என்று கூறி இருக்கிறார். அங்கிருந்த மர்மநபர் தன்னுடைய அண்ணன் கம்மலை சரி செய்து கொடுப்பார் என்று, சாந்தியை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றி கூட்டிச் சென்றுள்ளார். காலாங்கரைப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய மர்மநபர், சாந்தியை இறங்கச் சொல்லியிருக்கிறார். திடீரென்று அவர் தாக்கியதில் சாந்தி நிலைகுலைந்து போயுள்ளார். இந்த நிலையில் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல் உள்ளிட்ட நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
வாலிபர் கைது
இது தொடர்பாக சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வெள்ளைக்கல் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் திருமலை குமார் (37) என்பவர் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை ேபாலீசார் கைது செய்து அவரிடமிருந்து சாந்தியின் தங்க நகைகளை மீட்டனர். மேலும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவில்பட்டி குற்றவியல் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
2 ஆண்டு சிறைத்தண்டனை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடற்கரைச் செல்வம், பெண்ணை தாக்கி நகையை பறித்துச் சென்ற திருமலைகுமாருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.