கழுகுமலை அருகே மகன் தற்கொலை முயற்சி; மனமுடைந்த பெண் பூச்சிமருந்து குடித்து சாவு


தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் மனமுடைந்த பெண் பூச்சிமருந்து குடித்து இறந்து போனார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை அருகே மகன் தற்கொலைக்கு முயன்றதால் மனமுடைந்த பெண் பூச்சிமருந்து குடித்து இறந்து போனார்.

தந்தை கண்டிப்பு

கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி(வயது 52). கூலி தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி (46) என்ற மனைவியும், இசைசெல்வி, மகேஸ்வரி என்ற மகளும், மாரீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் இசைசெல்விக்கு திருமணமாகி விட்டது. மாரீஸ்வரன் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேஸ்வரி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மாரீஸ்வரன் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை மாடசாமி கண்டித்துள்ளார்.

மகன் தற்கொலை முயற்சி

இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன் நேற்று முன்தினம் பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். மகன் மருந்து குடித்ததை அறிந்து மனமுடைந்த ஈஸ்வரியும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக இருவரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாய் சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி தாயார் ஈஸ்வரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மாரீஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story