கம்மாபுரம் அருகேஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி தடுத்து நிறுத்தம்இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கம்மாபுரம் அருகே ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.
கம்மாபுரம்,
கம்மாபுரம் அருகே விருத்தகிரிகுப்பம் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணிகுளம் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கழிவறை கட்டுவதற்காக, ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஊராட்சி சார்பில் அளவீடு செய்ய அதிகாரிகள் வந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர்கள் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே அப்பகுதி பொதுமக்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த ஊ.மங்கலம் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இருதரப்பினரும், ஊராட்சியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.