கண்டாச்சிபுரம் அருகே கொத்தனார் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கண்டாச்சிபுரம் அருகே கொத்தனார் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 45). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய வீடு மாமனார் நல்லாண் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் நல்லாண் ஏழுமலையில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்கத்தில் இருந்த இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.