கண்டாச்சிபுரம் அருகே காலால் எட்டி உதைத்ததில் கரு கலைந்து பெண் சாவு கணவர் கைது
கண்டாச்சிபுரம் அருகே காலால் எட்டி உதைத்ததில் கரு கலைந்து பெண் உயிரிழந்தார். இதுதொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார்.
கண்டாச்சிபுரம்,
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் பாரதி(வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்தார். அப்போது பாரதிக்கும், சூரக்கோட்டையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஈஸ்வரன் தனது மனைவியை தனியாக விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பின்னர் பாரதி தனது மகனுடன், வீரங்கிபுரம் குளத்து மேட்டு தெருவில் உள்ள தனது அத்தை லட்சுமி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
4 மாத கா்ப்பம்
அப்போது அருகில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்வபாண்டியனுடன்(30) பாரதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். பாரதி தற்போது 4 மாத கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கர்ப்பத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி செல்வபாண்டியன் தகராறு செய்ததுடன் கருவை கலைத்து விடும்படி மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் பாரதி கருவை கலைக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
எட்டி உதைத்தார்
இதனால் ஆத்திரமடைந்த செல்வபாண்டியன் பாரதியை கீழே தள்ளி அவரது அடிவயிற்றில் காலால் எட்டி உதைத்தும், மிதித்தும் கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதில் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, பாரதியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாரதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாரதியின் தந்தை சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்த செல்வபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.