கண்டமனூர் அருகேசிறைக்குள் போதை மாத்திரை கடத்த முயன்ற கைதி
கண்டமனூர் அருகே சிறைக்குள் போதை மாத்திரையை கடத்த முயன்ற கைதி சிக்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துரையை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 24). இவர், தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலை விசாரணை கைதியாக உள்ளார். இவர் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலைய வழிக்காவலர்கள் ஈஸ்வரன், கருணாகரன் ஆகியோர் அன்பழகனை வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் விரைவு மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் அவரை சிறையில் அடைப்பதற்காக தேக்கம்பட்டி மாவட்ட சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது நுழைவு வாயில் பகுதியில் பணியில் இருந்த காவலர் விக்னேஷ் அன்பழகனை சோதனை செய்தார். சோதனையில் அன்பழகன் ஆசனவாய் பகுதியில் மறைத்து எடுத்து வந்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 48 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 17 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போதைப் பொருட்கள் எவ்வாறு அன்பழகனுக்கு கிடைத்தது?, அவருக்கு உதவியவர் யார்? என்பது குறித்து கண்டமனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகையிலை பொருட்கள் எடுத்து வந்த குற்றத்திற்காக அன்பழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.