காட்டுமன்னார்கோவில் அருகே மாயமான பெண் வீராணம் ஏரியில் பிணமாக மீட்பு மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார்
காட்டுமன்னார்கோவில் அருகே மாயமான பெண் வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டாா். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளாா்.
காட்டுமன்னார்கோவில், செப்.30-
காட்டுமன்னார்கோவில் அருகே கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் அகமதுல்லா. இவருடைய மனைவி முகபத்துன்னிசா(வயது 36). இவர்களுக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். அகமத்துல்லா வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் முகபத்துன்னிசா, கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம், முகபத்துன்னிசா, காட்டுமன்னார்கோவில் செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் முகபத்துன்னிசாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் எந்தவொரு தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கந்தகுமாரன் பகுதியில் உள்ள வீராணம் ஏரியில் பிணமாக மிதந்தார். இதுபற்றி அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முகபத்துன்னிசாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முகபத்துன்னிசாவின் தந்தை ஹஜ்ஜிமுகம்மது புத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.