கவுந்தப்பாடி அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கவுந்தப்பாடி அருகே வாங்கிய கடனை திரும்ப கட்டமுடியாததால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே வாங்கிய கடனை திரும்ப கட்டமுடியாததால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடை உரிமையாளர்
கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 52). இவர் கவுந்தப்பாடியில் விவசாயத்துக்கு தேவையான பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
இவருடைய மனைவி சித்ரா (42). இவர்களுடைய மகன் கார்த்திக் ராஜா (21).
வீட்டுக்கடன்
திருமூர்த்தி கடந்த 2014-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி உள்ளார். மேலும் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு ஈரோட்டில் உள்ள தனியார் வீட்டு வசதி நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கி அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கடனை அடைத்து விட்டதாக தெரிகிறது. எனினும் அவரால் தனியார் வீட்டு வசதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்து உள்ளார். இதன்காரணமாக அவருக்கு கடன் சுமை அதிகமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடனை எப்படி சமாளிப்பது என்பதே தெரியவில்லை என வீட்டில் இருந்து புலம்பியுள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் கோவை சென்றிருந்த கார்த்திக் ராஜா நேற்று காலை வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீடு பூட்டி கிடந்தது. இதனால் அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு அவருடைய தந்தை திருமூர்த்தியும், தாய் சித்ராவும் படுத்து கிடந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் கார்த்திக் ராஜா எழுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் எழுந்திருக்காமல் அசைவற்ற நிலையில் படுத்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்கள் அருகில் குருணை மருந்து கரைசல் கிடந்ததையும் கண்டார். எனவே அவர்கள் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமூர்த்தி, சித்ரா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'வீட்டுக்கடனை திருப்பி செலுத்த முடியாத கவலையில் கணவன், மனைவி 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது,' தெரிய வந்தது. எனினும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.