கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவர் கொலையில் பா.ஜனதா நிர்வாகி கைது


கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவர் கொலையில் பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவர் கொலையில் பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

பஞ்சாயத்து தலைவர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 65). விவசாயியான இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார்.

நேற்று முன்தினம் பொன்ராஜ் தனது தோட்டத்தில் இருந்தார். அப்போது, அங்கு வந்த மா்மநபர்கள் திடீரென்று அரிவாளால் பொன்ராஜை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் பொன்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உறவினர்களும், கிராம மக்களும் பொன்ராஜ் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் பொன்ராஜ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடேஷ் (கோவில்பட்டி), பிரகாஷ் (விளாத்திகுளம்), லோகேஷ்வரன் (மணியாச்சி) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொன்ராஜ் உடலை பெற்றுக் கொள்ளவதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர், கிராம மக்கள், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜனதா நிர்வாகி கைது

இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் கொலை தொடர்பாக தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் கார்த்திக் (33) மற்றும் 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியானது.

சுதந்திர தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றக் கோரி கார்த்திக், பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜிடம் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவருக்கும், பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக தோட்டத்தில் தனியாக இருந்த பொன்ராஜை, கார்த்திக் உள்ளிட்டவர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

----------


Next Story